மீண்டும் அமெரிக்க குருத்வாராவில் வன்முறை

திங்கள், 12 நவம்பர் 2012 (17:45 IST)
கலிபோர்னியாவில் குருத்வாராவை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட வன்முறையில், 2 சீக்கியர்கள் கத்தியால் குத்தப்பட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவை 73 உறுப்பினர்கள் கொண்ட இயக்குனர்கள் குழு கவனித்து வருகிறது.

இந்நிலையில், நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் என்று குழு உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் கடந்த செப்டம்பர் மாதம் வலியுறுத்தினர். இதுதொடர்பான வழக்கில் புதிய தேர்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் குருத்வாராவில் மீண்டும் இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. ஆனால், முடிவு எதுவும் ஏற்படாமல் கூட்டம் முடிந்தது. அப்போது 2 கோஷ்டிகளுக்கு இடையே மோதல் வெடித்தது.

ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் 2 பேருக்கு கத்திக் குத்து விழுந்தது. வன்முறையின் போது இரு தரப்பினரும் பெப்பர் ஸ்பிரேவை ஒருவர் மீது அடித்ததால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். எனினும் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்