மன்மோகன் பேச்சை இலேசாக எடுத்துக்கொள்ள முடியாது : பாக்.

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (13:36 IST)
இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதை இலேசாக எடுத்துக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய மன்மோகன் சிங், இந்தியாவில் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்புகள் புதிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமத் குரேஷியிடம் இது குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த குரேஷி, இந்தியப் பிரதமர் அவ்வாறு கூறியிருந்தால் அதனை பாகிஸ்தான் இலேசாக எடுத்துக் கொள்ளமுடியாது என்றும், இது குறித்த தகவல் இந்தியாவிடம் இருந்தால், அதனை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும்,அப்படி செய்தால்தான் அதனை தடுக்க உரிய நடவடிக்கையை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாகிஸ்தானின் இந்த எண்ணத்தை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாகவும்,அதற்கான பதிலை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த மாதம் எகிப்தில் இரு நாட்டு பிரதமர்களும் சந்தித்துப் பேசியபோது, பயங்கரவாதத்தை முறியடிக்க இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாகவும், எனவேதான் தற்போது இந்தியாவுக்கு கிடைத்த தகவலை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் குரேஷி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்