மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை: ஐ.நா. கவலை

புதன், 1 பிப்ரவரி 2012 (13:50 IST)
உலகில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தி இல்லை என ஐ.நா. சபை கவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள்,திட்ட அமலாக்கத்துக்கு இடையிலும் உலக மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி முன்னேறியுள்ள நிலையிலும், மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப உலகின் உணவு இருப்பு இருப்பதில்லை.

அதாவது இன்றைய மக்கள்தொகைக்கு தேவையான உணவு உற்பத்தி, கையிருப்பு ஆகியவை தற்காலிகமானவை. ஆனால் உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மையுடன் வளர்ச்சியை ஏற்படுத்துவதில் வெற்றி கிடைக்கவில்லை.

இப்போதைய உலக வளர்ச்சி முறை நிலையற்றதன்மை கொண்டதாக இருக்கிறது. அதிலிருந்து மாற சர்வதேச பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றம் தேவைப்படுகிறது.

இப்போது உலகின் பல பகுதிகளில் நிலவும் பொருளாதார பிரச்னைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக தொடங்க சிறந்த வாய்ப்பை அளித்துள்ளன.

கடந்த 1990 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்தவர்கள் எண்ணிக்கை 46 விழுக்காடாக இருந்தது. அது தற்போது 27 விழுக்காடாக குறைந்துள்ள போதிலும், நிலையான உணவு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இதை தக்க வைக்கவோ,மேலும் குறைக்கவோ முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்