போர் அகதிகளுக்கு சிறிலங்க அரசு உதவ வேண்டும்: ஐ.நா.

புதன், 2 டிசம்பர் 2009 (13:42 IST)
உள்நாட்டுப் போரினால் அகதிகளாக்கப்பட்டு, வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கும்போது அவர்களுக்குத் தேவையான அத்யாவசிய உதவிகளை சிறிலங்க அரசு அளிக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

வன்னி முகாம்களில் உள்ள தமிழ் அகதிகள் சுதந்திரமாக வெளியே சென்று வர நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி 6,000த்திற்கும் அதிகமான அகதிகள் அனுமதி பெற்று முகாமில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களைச் சென்று பார்த்துவரவும், அங்கே மீண்டும் சென்று குடியேறவும் சென்றுள்ளார்கள்.

இந்த நிலையில் முகாம்களில் இருந்து தாங்கள் வாழ்ந்த இடங்களுக்கு குடியேறுபவர்களுக்கு தேவைப்படும் அனைத்து அத்யாவசிய உதவிகளையும் சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் பேச்சாளர் கார்டன் வீஸ் கூறியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தியுள்ள பன்னாட்டு மன்னிப்புச் சபை(அம்னஸ்டி இண்டர்நேஷ்னல்), வன்னி உள்ளிட்ட முகாம்களில் இருந்து வெளியேறும் மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியது சிறிலங்க அரசின் கடமை என்று கூறியுள்ளது. முகாம்களில் இருந்து வெளியேறுபவர்கள் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த மாட்டார்கள் என்றும், மீ்ண்டும் கைது செய்யப்பட மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

முகாம்களை திறந்துவிட்டதுடன், அவர்களின் அடிப்படை உரிமைகள் காப்பாற்றப்படுவதையும் சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், தங்கள் வாழ்விடத்தில் அவர்கள் சந்திக்கப்போகும் சவால்களுக்கு முகம்கொடுத்து உதவ வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்