போர்க்குற்றம்: அணிசேரா நாடுகளின் ஆதரவை கோருகிறது இலங்கை

திங்கள், 18 ஏப்ரல் 2011 (13:14 IST)
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு, அணிசேரா நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

இராணுவ தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்குதவற்காக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஏற்பாட்டில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பு பொதுமக்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள்,அவர்களின் தாக்குதல்களின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் அதன்போது அரசாங்கப் பிரதிநிதிகள் தாம் செல்லும் நாடுகளின் முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்கவுள்ளனர்.

அத்துடன் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதன் காரணமாக நாட்டு மக்களுக்குக் கிடைத்த நன்மைகள் மற்றும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலும், அதன் பின்னும் இடம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கைகள் என்பன குறித்தும் அந்தந்த நாடுகளுக்கு விளக்கும் வகையில் விரிவான அறிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் தலைமை வழக்கறிஞர் அந்தத் தகவல்களைத் திரட்டி அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளதுடன், ஓய்வு பெற்ற தூதரக அதிகாரிகளான எச்.எம்.ஜி.எஸ். பலிஹக்கார, போ்ணாட் குணதிலக, நிஹால் ரொட்ரிகோ ஆகியோர் அவருக்கு உதவுமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை இராஜதந்திர ரீதியாக எதிர்கொள்ளும் முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்