பூகம்பம் புரட்டிய சீனாவில் உணவுக்கு குழந்தைகளுடன் அலைமோதும் மக்கள்

திங்கள், 22 ஏப்ரல் 2013 (17:27 IST)
FILE
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் கடுமையான சேதம் காணப்படுகிறது. அங்கு நிவாரணப் பொருட்களைப் பெற பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. கைக்குழந்தைகளுடன் உணவுப் பொருட்களைப் பெற பெண்கள் முந்தியடித்துக் கொண்டு கையை நீட்டும் நிலை உறுவாகியுள்ளது.

சீனாவில் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிச்சவான் மாகாணத்தில் யாயன் நகருக்கு அருகே நேற்று காலை ஏற்பட்ட பூகம்பம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானதில் பல மாடி கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்க அதிர்வுகளால் யாயன் நகரமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் சுமார் 20 வினாடிகள் குலுங்கின.
தொழிற் சாலைகளில் பணியில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் ஏராளமானவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இத்தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்றனர். ஆனால் சாலைகளை வழிமறித்து கட்டிட இடிபாடுகள் கிடந்ததால் அவர்களால் விரைவாக அந்த பகுதிக்கு செல்ல முடியவில்லை. எனவே பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்துள்ளனர்.

இன்று காலை நிலவரப்படி இடிபாடுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தவர்களில் சுமார் 15 ஆயிரம் பேர் மருத்துவமனைகளிலும், தற்காலிக மருத்துவ முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பல முதியோர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

சீன பிரதமர் லி கெக்கியாங் நிவாரண பணிகளை நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார். வீடிழந்த மக்களில் பலர் கைக்குழந்தைகளுடன் வயல்கள், கார்கள், சாலையோரம் போன்ற பகுதிகளில் தங்கியுள்ளனர். நிலநடுக்கத்தால் சாலைகளும் பிளவடைந்துள்ளதால், மீட்புப் படையினர் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 வீரர்கள் பலியாகினர்.

நிவாரணப் பொருட்களைப் பெற பெரும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. கைக்குழந்தைகளுடன் உணவுப் பொருட்களைப் பெற பெண்கள் முந்தியடித்துக் கொண்டு கையை நீட்டும் காட்சி மனதைப் பதறச் செய்தது.
மீட்புப் படையினருக்கு உதவுவதற்காக ரஷ்யாவில் இருந்து சுமார் 200 மீட்புப் பணியாளர் கொண்ட குழுவினர் இன்று பிற்பகல் சீனா விரைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்