பிரிட்டன்: இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை எதிர்த்து தமிழர்கள் உண்ணாவிரதம்

புதன், 30 மார்ச் 2011 (18:13 IST)
பிரிட்டனில் தங்கும் அனுமதி நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒன்பது பேர், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் பெருமளவிலான இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு திரும்பி வராத நிலையில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக, முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ள ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக பிரிட்டன் செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளர்.

மேலும் பலர் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கபட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பபடுகின்றவர்கள், இலங்கை குடியேற்ற அதிகாரிகளிடம் கையளிக்கபட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக அக்கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை வேறு முகாம்களுக்கு பிரித்து அனுப்ப அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்