பிரான்சும் மாயமான விமானத்தின் பாகங்களாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் புகைப்படத்தை அளித்தது

ஞாயிறு, 23 மார்ச் 2014 (16:35 IST)
கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு புறப்பட்ட MH 370 போயிங் ரக விமானம் 239 பயணிகளோடு கடந்த 8 ஆம் தேதி மாயமானது. இந்நிலையில் இந்த விமானத்தின் பாகங்களாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் புகைப்படத்தை ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகளை தொடர்ந்து பிரான்சும் மலேஷிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FILE

சுமார் 26 நாடுகள் மாயமான இந்த விமானத்தை தொடர்ந்து தீவிரமாக தேடி வரும் நிலையில், இந்த விமானத்தின் பாகம் போன்ற 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரேலியா தெரிவித்தது.

இதையடுத்து குறிப்பிடப்பட்ட அந்த பகுதிக்கு நான்கு ஆஸ்திரேலிய விமானங்கள் தேடுதல் பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பான தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில், இந்தியப் பெருங்கடலில், மிதக்கும் பொருள் ஒன்றை சீனா செயற்கைக்கோள் படம் பிடித்தது.

ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக்கோள் படத்தின் பகுதியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இந்தப் பொருள் மிதப்பதாக சீனா தெரிவித்துள்ளது. 22.5 மீட்டர் நீளமும், 13 மீட்டர் அகலமும் கொண்டதாக உள்ள அந்தப் பொருள், காணாமல் போன மலேஷிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
FILE

இதுதொடர்பாக சீன அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட கடல் பகுதிக்கு கப்பல்கள் விரைந்திருப்பதாகவும் மலேஷிய போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதவிர ஆஸ்திரேலியா வெளியிட்ட செயற்கைக்கோளை அடிப்படையாக வைத்தும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ள பிரான்சு MH 370 விமானத்தின் பாகங்களாக சந்தேகிக்கப்படும் பொருட்களின் செயற்கைக்கோள் புகைப்படத்தை மலேஷிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. இதன் அடிப்படையிலும் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே, விமானம் குறித்து உண்மையான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என அதில் பயணம் செய்த சீன பயணிகளின் உறவினர்கள் மலேஷிய அரசை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்