பாகிஸ்தானுக்கு 2.8 பில்லியன் டாலர்: அமெரிக்கா நிதியுதவி?

புதன், 1 ஏப்ரல் 2009 (12:16 IST)
பயங்கரவாதத்திற்கு எதிரான ராணுவ ரீதியான நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு 2.8 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை அமெரிக்கா அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இந்த நிதியைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில் வெளியான செய்தியில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கெர்ரி-லூகர் வரைவின் கீழ் 7.5 பில்லியன் டாலர் ராணுவ சாரா நிதியுதவியை அடுத்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்கும் அமெரிக்கா, கூடுதலாக 2.8 பில்லியன் டாலர் ராணுவ நிதியுதவியை வழங்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கோரத் திட்டமிட்டு உள்ளது.

இந்த ராணுவ நிதியுதவியை பாகிஸ்தான் எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா நிபந்தனைகள் விதிக்கும் என்றும், பிற நாடுகளை அச்சுறுத்தும் வகையில் பாகிஸ்தான் தனது ராணுவ பலத்தை இந்த நிதியுதவியைப் பயன்படுத்தி பெருக்கிக் கொள்ள அனுமதிக்கப்படாது என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் கூறியதாக அச்செய்தி கூறுகிறது.

இதுதொடர்பாக அமெரிக்க தளபதிகளில் ஒருவரான ஜெனரல் டேவிட் பெட்ரியாஸ் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் இந்த ராணுவ நிதியுதவி ‘பாகிஸ்தான் கிளர்ச்சித் தடுப்பு நிதி’ என்று அழைப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்