பாகிஸ்தானில் இருந்து தப்பினான் தாவூத் இப்ராகிம்

ஞாயிறு, 19 ஜூன் 2011 (12:49 IST)
பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பிரபல நிழலுக தாதாவும், மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியுமான தாவூத் இப்ராகிம்,உயிருக்கு பயந்து வேறு ஒரு நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க படைகள் கடந்த மே மாதம் 2 ஆம் தேதியன்று பின்லேடனை சுட்டுக் கொன்றது.மேலும் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்படுவர் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து கராச்சியில் தங்கி இருந்த தாவூத் இப்ராகிம் உயிருக்கு பயந்து தற்காலிகமாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்ட பிறகு,தனது பாதுகாப்பு குறித்து மிகவும் கவலையடைந்த தாவூத் இப்ராகிம், அவனது நெருங்கிய சகாக்களின் ஆலோசனையின் பேரிலேயே பாகிஸ்தானை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆனால் அவன் எந்த நாட்டிற்கு தப்பிச் சென்றான் என்பது குறித்த விவரம் தெரியவரவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்