பாகிஸ்தானில் அமெரிக்க உதவியை நாடும் இந்து தலைவர்கள்!

ஞாயிறு, 12 ஆகஸ்ட் 2012 (17:00 IST)
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சிறுபான்மையினரான இந்து மக்கள் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதலுக்கு அஞ்சி இந்து மதத் தலைவர்கள் அமெரிக்கா, மற்றும் இந்தியாவின் உதவியை நாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிந்து மகாணத்தின் மிர்புர்காஸ் பகுதி இந்துக்கள், தங்கள் பாதுகாப்புக்கும், தங்கள் மீது நடத்தப்படும் வன்முறை வெறியாட்டங்களைத் தடுக்க வழி தெரியாமலும் இந்திய மற்றும் அமெரிக்க தூதரகங்களை நாடியிருக்கின்றனர்.

சுமார் 20 குடும்பங்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விருப்பம் கொண்டு, உதவி கோரியுள்ளனர்.

மிர்புர்காஸ் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறுபான்மை இந்துக்கள் மீது இஸ்லாமிய சமூக விரோதிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்துவது நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்கவோ, இந்துக்களைக் காக்கவோ போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால் இந்துக்கள் விரக்தியின் எல்லையில் உள்ளனர் என்று ஹிந்து பஞ்சாயத் தலைவர் லக்ஷ்மண் தாஸ் பெர்மானி கூறியுள்ளார்.

வேறு வழி இன்றி அவர்கள் வெளியேறுகின்றனர். இவ்வாறு 18 குடும்பங்கள் வெளியேறியுள்ளன.

பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கும், சிலர் துபாய்க்கும் சென்றுவிட்டனர் என்று ஜியோ செய்திச் சேனலுக்கு பெர்வானி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்