பற்றி எரியும் காட்டுதீயை அணைக்க சென்ற US வீரர்கள் 25 பேர் உடல் கருகி பலி

திங்கள், 1 ஜூலை 2013 (13:45 IST)
கலிஃபோர்னியாவை அடுத்து அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீ அதிவேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 25 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய காட்டு தீயை, அருகே உள்ள நகரங்களுக்கு செல்லாமல் தடுக்க தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.

கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.

அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்