பணக்கார தலைவர்கள் பட்டியல்: எலிசெபத் ராணியை விஞ்சினாரா சோனியா காந்தி?

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (17:02 IST)
FILE
உலக கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் எலிசெபத் ராணியை பின்னுக்கு தள்ளிவிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை 12 வது இடத்தில் குறிப்பிட்டு Huffingtonpost பட்டியலிட்டிருந்தது. தற்போது அந்த பட்டியலில் இருந்து சோனியாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக Huffingtonpost தெரிவித்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள முதல் 20 கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரை திடீரென Huffingtonpost நீக்கியிருக்கிறது.

உலகில் உள்ள முதல் 20 கோடீஸ்வர அரசியல் தலைவர்கள் பட்டியலை Huffingtonpost வெளியிட்டிருந்தது. இந்தப் பட்டியலில் பல நாட்டு மன்னர்கள், அதிபர்கள் இடம்பிடித்திருந்தனர்.

ஆனால், அரசு ரீதியாக பொறுப்பு வகிக்காத காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இப்பட்டியலில் இங்கிலாந்தின் எலிசெபத் ராணியை பின்னுக்கு தள்ளிவிட்டு 12வது இடத்தை பிடித்திருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களின்படி சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ1.38 கோடியாகும். தனக்கு சொந்தமாக கார், வீடு கூட இல்லையென தெரிவித்திருந்த சோனியா, இத்தாலியில் பூர்வீக வீடு ஒன்று இருப்பதாகவும் அதன் மதிப்பு 18.02 லட்சம் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், Huffingtonpost - ன் உலக கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் அவர் எவ்வாறு இடம் பிடித்தார், குறிப்பாக இங்கிலாந்து ராணி எலிசெபத்தைவிட முன்னணியில் இருந்தார் குறித்து குழப்பம் நிலவியது.

இதனை காங்கிரஸ் கட்சியும் கடுமையாக விமர்சித்து நிராகரித்திருந்தது. இந்நிலையில் திடீரென Huffingtonpost 12வது இடத்தில் இருந்த சோனியா காந்தியின் பெயரை நீக்கியிருப்பதாக தெரிவித்தது.

சோனியாவின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்களை சரிபார்க்க முடியாத நிலையில் அவரது பெயர் நீக்கப்படுவதாகவும் குழப்பத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் Huffingtonpost தெரிவித்திருக்கிறது

எனினும், எந்த அடிப்படையில் சோனியாவின் பெயர் Huffingtonpost - ன் உலகளவில் முதல் 20 கோடீஸ்வர தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்தது என்பதும் எந்த அடிப்படையில் தற்போது சோனியாவின் பெயர் நீக்கப்பட்டது என்பது குறித்தும் தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்