நைஜீரியாவில் மதக்கலவரம்: 200 பேர் பலி!

புதன், 20 ஜனவரி 2010 (20:41 IST)
நைஜீரிய நாட்டில் கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக் கலவரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் ஜோஸ் நகரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் நடைபெற்றுவரும் இக்கலவரம் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், ஜோஸ் நகரிலிருந்து அதற்கு அருகிலுள்ள பான்க்ஷின் நகருக்கு கலவரம் பரவியுள்ளதாக பன்னாட்டுச் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

கலவரம் நடந்த ஜோஸ் நகரில் கடந்த 24 மணி நேரமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதெனவும், அங்கு கலவரம் கட்டுப்பட்டுள்ளதெனவும் அந்நாட்டு இராணுவத்தின் துணைத் தளபதி கலாடிமா கூறியுள்ளார்.
இந்தக் கலவரத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்றாலும், அங்கு நடந்த கால்பந்தாட்ட விளையாட்டின் போதுதான் கலவரம் வெடித்ததாகக் கூறப்படுகிறது.

நைஜீரியாவிற்கு மதக் கலவரம் புதிதல்ல. இங்கு 2001ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 1000 பேர் கொல்லப்பட்டனர் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்டக் கலவரத்தில் 200 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்