தாலிபான்கள் செல்வாக்கு மிக்க பகுதிகளில் 2000 பெண்கள் பள்ளிகள்

புதன், 26 பிப்ரவரி 2014 (17:59 IST)
பாகிஸ்தானில் தாலிபான்கள் செல்வாக்கு உள்ள பகுதிகளில் ஐ.நா. உதவியுடன் ரூ.210 கோடியில் பெண்கள் பயிலும் 2000 பள்ளிகளை கட்ட பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
FILE

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான பலுசிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் தாலிபான்களின் செல்வாக்கு மிக்க பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் பள்ளிகளுக்கு செல்ல பெண் குழந்தைகளுக்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளனர். கடந்த வருடம் மலாலா என்ற சிறுமி பள்ளிக்கு சென்று திரும்பும் போது தாலிபான்களால் சுடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இப்பகுதியில் பின்தங்கியுள்ள பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்த பாகிஸ்தான் அரசு ஐநாவிடம் உதவி கேட்டு வருகிறது. குறிப்பாக கல்வியில் வளர்ச்சி பணிகளை செய்வதற்காக யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பலுசிஸ்தான் மாகாணத்தின் யுனிசெப் தலைவர் சனவுல்லா பெனிசாய் கூறுகையில், மாகாண அரசுடன் இணைந்து கல்வி பணிகளை மேம்படுத்த ஐநா திட்டமிட்டுள்ளது.

இதற்காக சர்வதேச நிதியின் மூலமாக ரூ.210 கோடி வரை பலுசிஸ்தான் மாகாண அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மாகாண முதல்வர் சர்தார் ரசா முகமது பரீச் கூறுகையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் சுமார் 2.3 மில்லியன் குழந்தைகள் கல்வி கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இதனால் இப்பகுதியின் வளர்ச்சி எதிர்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. ஏற்கனவே உள்ளூர் நன்கொடையாளர்களை கொண்டு சுமார் 300 ஆரம்ப பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளோம். தற்போது மாகாணத்தில் சர்வதேச நிதி உதவியை கொண்டு 2000 பெண்கள் பள்ளிகளை அமைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்