தாலிபான்களின் அடுத்த இலக்கு வாஷிங்டன்?

புதன், 1 ஏப்ரல் 2009 (11:07 IST)
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபான்களின் அடுத்த இலக்கு அமெரிக்கத் தலைநகரம் வாஷிங்டன் என தாலிபான் தலைவர் பைதுல்லா மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரகசிய இடத்தில் இருந்து தொலைபேசி மூலம் பேசிய பைதுல்லா மசூத், லாகூர் அருகே உள்ள காவலர் பயிற்சி மையத்தில் தாக்குதல் நடத்தியது தாலிபான்கள்தான் எனப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே, காவலர் பயிற்சி மையம் மீது தாக்குதல் நடத்தியதாகவும், இதுபோன்ற தாக்குதல்கள் இனி தொடரும் என்றும் மசூத் அப்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏவுகணைத் தாக்குதலுக்கு காரணமான அமெரிக்காவையும் விரைவில் பழிவாங்குவோம். அதற்கான தாக்குதல் ஆப்கானிஸ்தானில் நடத்தப்படாது; வாஷிங்டனில் நடத்தப்படும். அதுவும் உலகையே வியக்கச் செய்யும் வகையில் அந்தத் தாக்குதல் இருக்கும் என்று மசூத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

லாகூர் அருகே உள்ள மனாவான் காவலர் பயிற்சி மையம் மீது பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் 7 பயிற்சிக் காவலர்கள், 4 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்