தமிழருக்கு எதிரான வெற்றியை கொண்டாட தயாராகிறது சிறிலங்கா

கொழும்பு : கொழும்பில் உள்ள காலிமுகத்திடலில் வருகிற 3 ஆம் தேதி புதன்கிழமையன்று பிரமாண்டமான வெற்றி விழாவினை கொண்டாட சிறிலங்கா அரசாங்கமும், சிங்களர்களும் தயாராகி வருகின்றனர்.

இலங்கையில் சிறுபான்மையாக உள்ள தமிழ் மக்களை அனைத்துலக சமூகத்தினர் மற்றும் இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் போரில் தோற்கடிக்கப்பட்டதை பெரும் வெற்றி விழாவாக கொண்டாட சிறிலங்கா அரசாங்கம் தயாராகி வருகின்றது.

காலிமுகத்திடலில் நாளை மறுதினம் புதன்கிழமையன்று நடைபெறவுள்ள கொண்டாட்டங்களின்போது முப்படையினர் மற்றும் காவல்துறை, ஊர்காவல் படையினரின் அணிவகுப்புக்களும் ஆயுத கண்காட்சிகளும் நடைபெறவுள்ளன.

அதற்கு ஏதுவாக நாளை நள்ளிரவில் இருந்து வருகிற வியாழக்கிழமை பிற்பகல் வரையிலும் பம்பலப்பிட்டிக்கும் மருதானைக்கும் இடையிலான தொடருந்து சேவைகளை அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தியுள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 21 அரசாங்க பாடசாலைகளும், வெற்றி விழா கொண்டாட்ட துவக்க தினமான முதலாம் நாளில் இருந்து மூன்றாம் நாள் வரையிலும் மூடப்பட்டிருக்கும் என்று சிறிலங்கா அரசு அறிவித்துள்ளதாக புதினம் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்