சோமாலியா அருகே 21 ஊழியர்களுடன் கப்பல் கடத்தல்!

புதன், 15 அக்டோபர் 2008 (17:12 IST)
சோமாலியாவுக்கு அருகே உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக்கப்ப‌ல் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கடல்சார் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சர்வதேச கடல்சார் அமைப்பைச் சேர்ந்த நோயல் சோங் கூறுகையில், மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து நேற்று ஆசியாவை நோக்கி கப்பல் வந்து கொண்டிருந்த போது ஏடன் வளைகுடா பகுதியில் கடத்தப்பட்டது. அதிலிருந்த 21 ஊழியர்களும் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கடத்தப்பட்ட கப்பலில் பனாமா தே‌சிக்கொடி பறந்ததாகவும், ஆனால் அக்கப்பல் பிலிப்பைன்ஸில் இருந்து இயக்கப்பட்டதாகவும் இருவேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கடத்தப்பட்ட ஊழியர்களில் இந்தியா, ரஷ்யாவைச் சேர்ந்தவர்களும் உள்ளதால், இருநாட்டு அரசுகளும் அவர்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

மேலும் கப்பல் ஊழியர்களை விடுவிக்க கட‌ல்கொள்ளையர்கள் 48 மணி நேரம் கெடு விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்