சீன நிலநடுக்கத்திற்கு 44,000 பேர் பாதிப்பு!

சனி, 22 மார்ச் 2008 (15:22 IST)
சீனாவின் உய்குர் பகுதியில் கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கும் அதன் பிறகு ஏற்பட்ட 12 பின் அதிர்வுகளுக்கும் சுமார் 44,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தெற்கு சிங்ஜியாங் மாகாணத்தில் உள்ள யுடியான், குவிரா, லாப் ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 2,200 வீடுகள் தரைமட்டமானதாக அரசு செய்திகள் தெரிவித்துள்ளன. நூற்றுக்கணக்கான கால் நடை கொட்டகைகளும் காய்கனி கொட்டகைகளும் தரைமட்டமாகியுள்ளதாக தெரிகிறது.

யுடியான் என்ற இடத்தில் வெள்ளியன்று முதலில் ரிக்டர் அளவுகோலில் 7.3 என்று பதிவான பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு 12 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. பின் அதிர்வுகள் ரிக்டர் அளவுகோலில் சராசரியாக 3.8 என்று பதிவாகியுள்ளது.

பூகம்பத்திலிருந்து காக்கும் வீடுகளில் இருந்துவரும் 190 குடும்பங்கள் இந்த பயங்கர நில நடுக்கத்தின் விளைவுகளிலிருந்து தப்பித்துள்ளன.

பூகம்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த அக்கான், பாஸ்டன் நகர்ப்பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக இருந்தாலும் மின்சார இணைப்பும், தொலைத் தொடர்பு இணைப்புகளும் பாதிப்படையவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்