சீனா எதிர்ப்பை மீறி தலாய் லாமைவை சந்திக்கிறார் ஒபாமா

புதன், 3 பிப்ரவரி 2010 (12:52 IST)
சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா வரும் திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அதிபர் பராக் ஒபாமா சந்திப்பார் என வெள்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார்.

திபெத்திய மத தலைவர் தலாய் லாமா இம்மாதம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வாஷிங்டனிலும் ஓரிரு தினங்கள் தங்க உள்ளார்.

அப்போது அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்கக்கூடும் என செய்தி வெளியானது.

இந்நிலையில் அமெரிக்கா வரும் தலாய் லாமாவை ஒபாமா சந்திக்ககூடாது என்றும், மீறி தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தால் சீனா - அமெரிக்கா இடையேயான அரசியல் உறவு வெகுவாக பாதிக்கப்படும் என்றும் சீனா நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா வரும் திபெத்திய தலைவர் தலாய் லாமாவை அதிபர் பராக் ஒபாமா சந்திப்பார் என செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பில் பர்ட்டன் தெரிவித்தார்.

அதே சமயம் ஒபாமா - தலாய் லாமா இடையேயான சந்திப்பு எந்த தேதியில் நடைபெறும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

சீனாவின் எதிர்ப்பு குறித்து கேட்டபோது, கடந்த ஆண்டு ஒபாமா சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோதே அந்நாட்டு தலைவர்களிடம் தாம் தலாய் லாமாவை சந்திக்கப்போவதாக தெரிவித்துவிட்டார் என்றார்.

அதே சமயம் திபெத்தை சீனாவின் ஒரு அங்கமாகவே தமது நாடு கருதுவதாகவும்,ஆனால் திபெத்தியர்களின் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்