சீனாவில் ஆசிப் அலி சர்தாரி: 4 நாள் பயணம்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (16:55 IST)
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி 4 நாள் அரசு முறைப் பயணமாக இன்று இஸ்லாமாபாத்தில் இருந்து சீனா புறப்பட்டுச் சென்றார்.

அதிபராகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக பீஜிங் சென்றுள்ள சர்தாரி, பாகிஸ்தான் - சீனா இடையே இருதரப்பு பொருளாதார மற்றும் ராஜ்ய உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அதிபர் ஹூ ஜிண்டாவோ உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுகள் நடத்துவார் என்று தெரிகிறது.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர், திட்டக்குழு துணைத்தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் சர்தாரியுடன் சீனா சென்றுள்ளது.

சர்தாரியின் பயணத்தை முன்னிட்டு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஏற்கனவே சீனா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

சீனாவுடன் எப்போதுமே புரிந்துணர்வு, நம்பிக்கை, நல்லெண்ண உறவுகளை பாகிஸ்தான் கொண்டிருந்ததாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தப் பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே பொருளாதாரம், எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு நாடுகளிடையே அணு சக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்துவதற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்