சரப்ஜித் சிங் கருணை மனுவை நிராகரித்தது பாக். உச்சநீதிமன்றம்

புதன், 24 ஜூன் 2009 (15:51 IST)
லாகூர் தொடர் குண்டுவெடிப்பில் குற்றம்சாற்றப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர் சரப்ஜித் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்தது.

கடந்த 1990இல் லாகூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சரப்ஜித் சிங்கிற்கு தொடர்புள்ளது என பாகிஸ்தான் அரசு குற்றம்சாற்றியது. இதையடுத்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்தாண்டு ஏப்ரலில் சரப்ஜித் சிங்கிற்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பிரதமர் யூசுப் ரஸாக் கிலானி இப்பிரச்சனையில் தலையிட்டதால், அந்நாட்டு அதிகாரிகள் தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை ஒரு மாதம் தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

அந்த ஒரு மாத காலம் முடிவடைவதற்கு உள்ளாகவே, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை காலவரையின்றி தள்ளிவைப்பதாக மறுஅறிவிப்பு வெளியிட்டனர்.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சரப்ஜித் சிங் சார்பில் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.

சரப்ஜித் சிங்கின் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருந்தது. ஆனால் சரப்ஜித் வழக்கறிஞர் நேரில் ஆஜராகாத காரணத்தால் வழக்கை இன்று வரை தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

இன்று அந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்த போது, சரப்ஜித் சிங் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து சரப்ஜித் சிங்கின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்தியாவில் வசிக்கும் சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர், அவரது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது தங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்திய அரசு இதில் தலையிட்டு சரப்ஜித் சிங்கை காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.