குழந்தை பிறந்தவுடனேயே கார் டிக்கியில் மறைத்துவைத்த தாய்

புதன், 30 அக்டோபர் 2013 (12:54 IST)
பிரான்சில் தாய் ஒருவர் அவரது 2 வயது குழந்தையை, அது பிறந்ததிலிருந்தே கார் டிக்கியில் வைத்து இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
FILE

பிரான்சில் உள்ள வாகனம் பழுது பார்க்கும் மெக்கானிக் கடையில் பெண் ஒருவர் அவரது காரினை விட்டுச் சென்றுள்ளார். சில நாட்கள் கழித்து அந்த காரிலிருந்து குழந்தையின் சத்தம் கேட்டதால் அங்கு பணிப்புரியும் மெக்கானிக் ஒருவர் காரின் டிக்கியை திறந்தப்போது அங்கு ஊட்டச்சத்து இல்லாத நிலையில் அழக்கூட முடியாத ஒரு 2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மெக்கானிக் அந்த பெண் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

குழந்தைக்கு சுயநினைவு இருந்த நிலையில் அது சுகாதாரமற்ற சூழலில், சோர்ந்துப்போய் காணப்பட்டது. உடல் முழுவதும் காயங்களுடன் வலிமையற்ற நிலையில் இருந்த அந்த குழந்தையை பார்த்த மெக்கானிக் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தார்.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அக்குழந்தையின் தாய் அவருக்கு பிறந்த இந்த பெண் குழந்தையை அவரது கணவரிடமிருந்து மறைக்க அது பிறந்தவுடனேயே அதனை கார் டிக்கியில் அடைத்துவிட்டதும், அவ்வப்போது அதற்கு உணவு அளித்துவந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோர்கள் மீது குழந்தை முறைகேடு மற்றும் புறக்கணிப்பு என்ற பிரிவுகளில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. இந்த குற்றதிற்காக அவர்களுக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்