காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீர்வு சாத்தியமே: பான்-கி-மூன்!

செவ்வாய், 4 நவம்பர் 2008 (14:01 IST)
காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுகள் மூலம் இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

PTI PhotoFILE
அதேவேளையில், ஐ.நா தலையீடு இல்லாமல் இப்பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற பாகிஸ்தானின் வாதத்தையும் பான்-கி-மூன் மறுத்துள்ளார்.

ஒருவேளை இப்பிரச்சனையைத் தீர்த்து வைக்க ஐ.நா. முன்வருமா என்று பாகிஸ்தான் சார்பில் கேட்டதற்கு, இரு தரப்பினரும் பரஸ்பரம் வலியுறுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ளும் என அவர் பதிலளித்தார்.

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இடையே சமீபத்தில் நியூயார்க்கில் நடந்த சந்திப்பின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான எல்லை வர்த்தகம் துவக்கப்பட்டதுடன் தொடர்ந்து சிறப்பாகவும் நடந்து வருகிறது.

இதுபோன்ற துறைகளில் தொடர்ந்து நடவடிக்கைகளை மேம்படுத்தினால், காஷ்மீர் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தை மூலம் இருநாடுகளும் அமைதித் தீர்வு காண முடியும் என்றும் தாம் நம்புவதாக பான்-கி-மூன் கூறினார்.

மியான்மரில் ஜனநாயகம் மலரச் செய்யும் நடவடிக்கைகளில் இந்தியாவிடம் இருந்து ஏதாவது உறுதிமொழி வழங்கப்பட்டதா என்ற கேள்விக்கு, பிரதமர் மன்மோகன் சிங் உடனான சந்திப்பின் போது இதுகுறித்து தாம் விரிவாக விவாதித்ததாகவும், அப்போது இருதரப்பினரும் இணைந்து மியான்மரில் ஜனநாயகம் மலரச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பேசியதாகவும் பான்-கி-மூன் கூறினார்.

மியான்மரில் ஜனநாயகம் மலரச் செய்ய அப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளின் ஒருங்கிணைந்த, கூட்டு முயற்சி தேவை. குறிப்பாக இந்தியா, சீனாவின் முயற்சி தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.