ஏர் பிரான்ஸ் விமான விபத்து : மேலும் புதிய தகவல்

வெள்ளி, 3 ஜூலை 2009 (13:15 IST)
228 பேரை பலிகொண்ட ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாக விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதியன்று ஏர் ஃபிரான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ 330 ரக ஏர் பஸ் ரக விமானம் ஒன்று, 216 பயணிகள் மற்றும் 12 விமான சிப்பந்திகளுடன், ரியோ டே ஜானிரோவிலிருந்து பாரீஸ் நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், அந்த விமானம் அட்லாண்டிக் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அதில் பயணம் செய்த 228 பேருமே உயிரிழந்த நிலையில், சடலங்களை தேடும் பணியை முடித்துக் கொள்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீட்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த விமான விபத்து குறித்து விசாரணை நடத்திய பிரான்ஸ் விசாரணைக் குழு , விபத்துக்குள்ளான விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது நொறுங்கி விழவில்லை என்றும், விபத்துக்கு வேறு ஏதோ காரணம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளதாக நேற்று கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த கூற்றை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானம் , வானில் எவ்வித சேதமும் இல்லாமல் முழுமையாக கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதன் அடிப்பாகம்தான் முதலில் கடலை தாக்கியுள்ளதாகவும் , இதன் காரணமாகத்தான் அதில் பயணம் செய்தவர்கள் " லைஃப் ஜாக்கெட் " கூட அணிய அவகாசமில்லாமல் நீரில் மூழ்கி உயிரிழக்க நேரிட்டதாக விசாரணைக் குழுவில் இடம்பெற்ற பொல்லியர்ட் என்ற அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே சமயம் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்