உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?

சனி, 3 ஆகஸ்ட் 2013 (12:38 IST)
FILE
உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்செல் பர்கே தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகத்தில் வெப்பநிலை அல்லது மழை அளவு சிறிது மாறினாலும் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் ஆகியவை அதிகரிக்கிறது. உச்சபட்சமாக இரு குழுவினரிடையே மோதல்கள், நாடுகளிடையே போர் ஆகியவையும் கூட நடக்கிறது.

உலகம் முழுவதும் 60 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டு புள்ளிவிவரங்கள் தொகுக்கப்பட்டு அவை இறுதியாக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றத்துக்கும், பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் சமீபத்தில் வறட்சி ஏற்பட்டபோது, அங்கு தாக்குதல் சம்பவங்கள், பலாத்காரங்கள், கொலைகள் அதிகரித்தன.

இதேபோன்று அமெரிக்காவிலும் நடந்தன. வெப்பநிலை அதிகரிக்கும்போது, மனித மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு, வன்முறைகள் ஏற்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

உதாரணமாக 2 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உயர்ந்தாலே தனிப்பட்ட குற்றங்கள் 15 சதவீதம் அதிகரிப்பதும், குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் 50 சதவீதம் வரை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்