இராணுவ முகாம்களை ஒருபோதும் அகற்றப்போவதில்லை: ராஜபக்ச

வியாழன், 22 டிசம்பர் 2011 (20:24 IST)
FILE
இலங்கையில் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டுவரும், ஏற்கனவே இருந்துவரும் இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட்டாது என்று சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சிறிலங்க அரசின் 2012ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் மீது உரையாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ச, “தேச பாதுகாப்புக் கருதி மாவட்டங்கள் தோறும் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவ முகாம்கள் ஒருபோதும் நாம் அகற்றப்போவதில்லை” என்று பேசியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை எதிர்த்த ராஜபக்ச, வெளிநாட்டுத் தீர்வு யதார்த்தப்பூர்வமானது இல்லை என்பதைப் புரிந்துகொண்டு அடம்பிடிக்காமல் தேசிய நீரோட்டத்தில் த.தே.கூ. இணைந்து அரசுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரும் எந்த அரசியல் அதிகாரத்தையும் தர முடியாது என்று கூறியுள்ள ராஜபக்ச, அரசியலமைப்பின்படி, நிதி அதிகாரம், பாதுகாப்பு, நிர்வாகம், மக்கள் நலன் ஆகியவற்றை நடத்திச் செல்வது சிறிலங்க அரசின் பொறுப்பு என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழர் இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பாதையை முற்றிலுமாக ராஜபக்ச புறக்கணித்துள்ளார்.

“துரையப்பாவின் கொலை முதல் தொடர்ந்த கொலைக் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டு வரப்படுள்ளது. அவை தொடர்பில் ஆராய்ந்து நல்லிணக்க ஆணைக் குழுவினால் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறிய ராஜபக்ச, தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு பற்றி யோசனையை பாராளுமன்றக் குழு அரசுக்குத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்