இன பிரச்னைக்கு தீர்வு : அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு மாத கெடு

புதன், 1 ஜூலை 2009 (18:36 IST)
இன பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் குழு , தனது செயல்பாடுகளை ஒரு மாத காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் இலங்கை அரசு என உத்தரவிட்டுள்ளது.

இந்தக் குழு செயலகமாகப் பயன்படுத்தி வந்த சமாதான செயலகத்தை மூடிவிட அரசு தீர்மானித்திருப்பதையடுத்தே அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு இந்தக் காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கின்றது.

அரசு சமாதான செயலகத்தை இம்மாத இறுதியுடன் மூடிவிடுவதற்கான உத்தரவு இலங்கை அதிபரின் செயலகத்தினால் பிறப்பிக்கப்பட்டதையடுத்து , அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக சமாதான செயலகப் பணிப்பாளர் நாயகம் ரஜீவ விஜயசிங்கவிடம் கேட்டபோது, அனைத்துக் கட்சிப் பிரநிதிகள் குழுவுக்கு அதன் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு ஒரு மாத காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்தார்.

இருந்தபோதிலும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அதன் செயற்பாடுகளை ஒரு மாத காலத்துக்குள் பூர்த்தி செய்யவில்லை என்றால் அதன் செயற்பாடுகளை மேற்கொண்டு முன்னெடுப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் சில இருப்பதாகவும் வேறு சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்