இனப் படுகொலைக்கு என்றாவது ராஜபக்ச பதில் கூறியாக வேண்டும்: பேராசிரியர் பாய்ல்!

வெற்றி பெற்ற நாடுகள் எதுவும் போர் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட வரலாறு இல்லை என்று சிறிலங்க அரசின் தூதர் பலித கோஹனா கூறியுள்ளதை மறுத்துள்ள சர்வதேச சட்ட அறிஞர் பிரான்சிஸ் பாய்ல், என்றாவது ஒருநாள் ராஜபக்ச சகோதரர்கள் தாங்கள் நடத்திய இனப் படுகொலைக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறிபிரீனிகாவில் நடத்திய இனப் படுகொலைக்கும், மனித உரிமை மீறல்களுக்கும், போர் குற்றங்களுக்கும் காரணமான யுகோஸ்லாவிய அதிபர் மிலோசவிச், அப்பொறுப்பில் இருந்தபோதுதான் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடத்தபட்டது என்றும், விசாரணை முடிவதற்குள் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறியுள்ள பேராசிரியர் பாய்ல், ஸ்பிர்க்கா குடியரசின் அதிபராக தனக்குத் தானே முடிசூட்டிக்கொண்ட மிலோசவிச்சின் கையாள் ராடோவான் கராட்சிக் இனப் படுகொலைக் குற்றத்திற்கான விசாரணையில் உள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நெட் இணையத் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ள பாய்ல், “ஒரு நாள் சிறிலங்க அரசு இனப் படுகொலையாளர்களையும் - குறிப்பாக ராஜபக்ச சகோதரர்களையும், இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் - வன்னியில் அவர்களை நிகழ்த்திய தமிழினப் படுகொலைக்குப் பொறுப்பாக்குவோம்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்