இந்தி மொழி : நேபாள துணை அதிபருக்கு கொலை மிரட்டல்

சனி, 29 ஆகஸ்ட் 2009 (16:56 IST)
இந்தி மொழியில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நேபாள துணை அதிபர் பரமானந்தா ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும்விதமாக அவரது வீட்டருகே இன்று குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

நேபாள நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பரமானந்தா ஜா, கடந்த 2009 ஆம் ஆண்டு, டெராய் பகுதி கட்சிகளின் ஆதரவுடன் நேபாள நாட்டின் துணை அதிபராக பரமானந்தா ஜா பதவியேற்றுக்கொண்டார்.

ஆனால் பதவிப்பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் அவர் நேபாள மொழியில் எடுக்காமல், இந்தி மொழியிலேயே ஏற்றுக்கொண்டார்.

இது மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனையடுத்து நேபாள வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம், ஜா மீண்டும் நேபாள மொழியிலோ அல்லது அவரது தாய் மொழியான மைதிலி மொழியிலோ மீண்டும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துவிட்ட ஜா, இது ஒருதலைபட்சமான தீர்ப்பு என்றும், மீண்டும் நேபாள மொழியில் பதவிப்பிரமாணம் எடுக்குமாறு தம்மை கட்டாயப்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தார்.

அத்துடன் மீண்டும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதைவிட பதவியை ராஜினாமா செய்ய தாம் தயாராக இருப்பதாக பரமானந்தா ஜா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பரமானந்தா ஜா வீட்டருகே இன்று காலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியது தாங்கள்தான் என்று கிரத் ஜனாபாதி தொழிலாளர்கள் கட்சி கூறியுள்ளது.

பரமானந்தா ஜா, நேபாள மொழியில் மீண்டும் பதவியேற்கவில்லை எனில் இதைவிட கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்றும் அந்த கட்சி மிரட்டல் விடுத்துள்ளது.

இதனிடையே இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நேபாள பிரதமர் மாதவ் குமார், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்