இந்தியாவுக்குள் ஊடுருவ பாக். காஷ்மீரில் ஒன்றிணையும் தீவிரவாதிகள்

சனி, 15 மே 2010 (15:59 IST)
இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக ஏராளமான தீவிரவாதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்றிணைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் நீலம் பள்ளத்தாக்கில் தங்களது "ஜிகாத்" நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தீவிரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்றிணைந்து வருவதை அப்பகுதி உள்ளூர் மக்களும், அரசியல்வாதிகளும் நேரில் பார்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இவர்களில் பலர் இந்தியாவுக்குள் தற்போது ஊடுருவிக் கொண்டிருப்பதாகவும், கடந்த சில வாரங்களாகவே "ஜிகாத்" நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கிவிட்டதாக பாகிஸ்தானின் அனைத்துக் கட்சி தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் ஷாகித் தெரிவித்துள்ளார்.

எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டையொட்டிய நீலம் பள்ளத்தாக்குப் பகுதிகளிலேயே தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை காண முடிவதாக பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஷாகித் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இந்த தீவிரவாதிகள் யாரும் உள்ளூரை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், நீண்ட தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்படும் இவர்களை பார்த்து உள்ளூர் மக்கள் பயப்படுவதாகவும், அவர்கள் பேசுகிற மொழியை பார்த்தால் நிச்சயம் அவர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை அறிந்துகொள்ள முடிவதாகவும் அவர் அந்த பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்