இந்தியர்கள் குறித்து ஆஸி. காவல்துறை இனவெறி இமெயில்

சனி, 9 அக்டோபர் 2010 (14:12 IST)
இந்தியர்கள் குறித்து ஆஸ்ட்ரேலிய காவல்துறை உயரதிகாரிகள் தங்களுக்குள் இனவெறி இமெயில்களை பகிர்ந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்ட்ரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிரான இனவெறி தாக்குதல்கள் அண்மைக் காலமாக ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு இந்தியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது குறித்து இந்திய அரசு கவலை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ஆஸ்ட்ரேலிய காவல்துறை உயரதிகாரிகள் சிலரே தங்களுக்குள், இந்தியர்களைப்பற்றி இனவெறியுடன் கேலி மற்றும் கிண்டலாக ஒருவருக்கு ஒருவர் இமெயில்களை அனுப்பி பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இத்தகைய இமெயில்களில் இடம்பெற்றிருந்த தகவல்களை மெல்போனிலிருந்து வெளியாகும் ' த ஹெரால்டு சன்" என்ற ஆஸ்ட்ரேலிய ஊடகம் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கூட்டம் நிறைந்த ரயில் ஒன்றின் மேற்கூரையில் அமர்ந்து பயணிக்கும் இந்தியர் ஒருவர், ரயில் நிலையம் ஒன்றில் ரயில் நிற்கும்போது, எழுந்து நிற்கிறார்.

அதனைப் பார்த்து கீழே நிற்கும் பயணிகள், பயத்தில் அலறும்போதே அந்த பயணி மீது மேலே செல்லும் மின்சார ஓவர்ஹெட் கேபிள் வயரின் மின்சாரம் பாய்ந்து, அவர் உயிரிழக்கிறார்.

இந்த காட்சி அடங்கிய வீடியோவை காவல்துறை அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் அனுப்பி, ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்திய மாணவர்களின் பிரச்சனயை தீர்க்கவும் இதுதான் (மின்சாரம் பாய்ச்சுவது) சிறந்த வழி என்று கூறி, மேலும் பல கேலி, கிண்டல்கள் அடங்கிய இனவெறி வாசகங்களை அனுப்பியுள்ளனர்.

இது குறித்து ஆஸ்ட்ரேலியாவில் உள்ள இந்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காவல்துறை அதிகாரிகளே இத்தகைய இனவெறியுடன் இருக்கும்போது, தாங்கள் தாக்கப்பட்டால் தங்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும் என்று குமுறல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான ஆஸ்ட்ரேலியா தூதர் பீட்டர் வர்கீஸிடம் விளக்கம் கோருமாறு தமது அமைச்சக அதிகாரிகளுக்கு இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு பீட்டருக்கு இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்