இங்கிலாந்தின் டென்னிஸ் வீராங்கனை புற்று நோயால் மரணம்

Ilavarasan

திங்கள், 5 மே 2014 (13:18 IST)
புற்று நோய் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்தின் முன்னாள் நெ.1 டென்னிஸ் வீராங்கனை எலெனா பல்டாச்சா தனது 30 ஆவது வயதில் புற்று நோயால் நேற்று காலமானார்.
 
உக்ரைன் நாட்டின் தலைநகர் கீவ்-வில் பிறந்த இவர், தனது தந்தை இங்கிலாந்தில் பிரபல தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக திகழ்ந்த வேளையில் அந்நாட்டில் குடியேறினார். 1997 ஆம் ஆண்டு தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக தனது சகாப்தத்தை தொடங்கினார். 
 
2010ல் டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் 49 ஆவது இடத்தை எட்டிப் பிடித்த இவர், இங்கிலாந்து நாட்டின் டென்னிஸ் வீராங்கனைகளின் பட்டியலில் முதல் இடத்தை அடைந்தார். 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்ற எலெனா பல்டாச்சா, அதன் பின்னர் ஏற்பட்ட மூட்டுக் காயத்தால் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். 
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பயிற்சியாளரை திருமணம் செய்துக் கொண்ட இவருக்கு ஈரல் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணமடைந்தார்.
 
எலெனா பல்டாச்சா-வின் மறைவுக்கு இங்கிலாந்தில் உள்ள பல்வேறு டென்னிஸ் சங்கங்களும், லட்சக்கணக்கான ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்