ஆஸி. : இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை கட்டுப்படுத்தக் குழு

மெல்பர்ன் : ஆஸ்ட்ரேலியாவில் இந்தியர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு புதிய பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளது.

ஆஸ்ட்ரேலிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் டங்கன் லூயிஸ் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தக் குழுவில் அயலுறவு மற்றும் வர்த்தக துறை, கல்வி துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை துறை, அட்டார்னி ஜெனரல்கள் துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளதாக ஆஸ்ட்ரேலிய அயலுறவுத் துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித், அந்நாடு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

கடந்த மே மாதத்தில் மட்டும் 7 இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவங்களைத் தொடர்ந்து டெல்லியிலுள்ள ஆஸ்ட்ரேலிய தூதரை நேரில் வரவழைத்து இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதற்கு தனது கடும் எதிர்ப்பை இந்தியா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்