ஆப்கானிலிருந்து கூட்டுப்படைகள் வெளியேற மன்மோகன் எதிர்ப்பு

செவ்வாய், 24 நவம்பர் 2009 (13:50 IST)
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் முன்கூட்டியே வெளியேறுவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நான்கு நாள் பயணமாக அமெரிக்கா வந்துள்ள மன்மோகன், அமெரிக்க - இந்திய தொழில் கவுன்சிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள உலக நாடுகள்,தொடர்ந்து அங்கே தமது பணிகளை தொடர வேண்டும்.அதற்கு மாறாக முன்கூட்டியே அங்கிருந்து வெளியேறுவது குறித்து சிந்திக்கக்கூடாது.அவ்வாறு வெளியேறுவது தீவிரவாதிகளுக்கு தைரியமளித்து விடுவதாக அமைந்துவிடும்.

அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியையும், நிலையான வளர்ச்சியையும் ஏற்படுத்த சர்வதேச சமுதாயம் காட்டி வரும் அக்கறை மற்றும் பங்களிப்பை இந்தியா மிகவும் வரவேற்று ஆதரிக்கிறது.

பயங்கரவாத தடுப்பு விடயத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் இன்னும் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்