அயல் அலுவக பணியை நிறுத்துவேன் - ஒபாமா!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (13:58 IST)
வாஷிங்டன்; அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா, அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதாக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.

அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள ஜனநாயக கட்சியின் வேட்பாளராக பாரக் ஒபாமாவும், ஆளும் குடியரசுக் கட்சி வேட்பாளராக மேக்கெனும் போட்டியிடுகின்றனர்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும், வேலையில்லா திண்டாட்டத்திற்கும் குடியரசுக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம் என்று பாரக் ஒபாமா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.

அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்த முதலில் தற்போது இருந்து வரும் கடன் நெருக்கடிகளை அகற்ற வேண்டும் என்று கூறிய ஒபாமா, ஒவ்வொரு அமெரிக்கரும் சிறந்த முறையில் வாழ நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கொலராடோ மாகாணத்தின் டென்வரில் அவர் நேற்று பேசுகையில், அயல் அலுவலக பணி குறித்து, தனது கொள்கையை அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "புதிதாக இங்கு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு புதிய அமெரிக்க பணி வரிச்சலுகைகளை அளிக்கப்போகிறேன், பணிகளை பிற நாடுகளுக்கு அயல் அலுவலக பணிக்கு கொடுக்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளை நிறுத்தி, அதன் பயனை இங்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு அளிப்பேன்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்