அமெரிக்காவும் சீனாவும் பிரிந்துபோக முடியாது!

செவ்வாய், 2 பிப்ரவரி 2010 (16:05 IST)
தைவானுக்கு ஆயுதம் விற்பது, கூகுள் செயல்பாட்டிற்குத் தடை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்தாலும், அமெரிக்காவும் சீனாவும் ஒன்றை விட்டு மற்றொன்று பிரிந்து செல்ல முடியாது என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் பேச்சாளர் இராபர்ட் கிப்ஸ், “ஒரு நாட்டை விட்டு மற்றொன்று அவ்வளவு சுலபமாக போய்விட முடியும் என்று நான் கருதவில்லை. அதனை நாங்களும் செய்ய மாட்டோம். இரு நாடுகளும் பிரிய வேண்டும் என்று எவரும் விரும்புவார்கள் என்றும் கருத இடமில்லை” என்று கூறியுள்ளார்.

தைவானிற்கு பல நூறு கோடி டாலர் மதிப்பிற்கு அதி நவீன ஆயுதங்களை விற்க அமெரிக்கா முடிவு செய்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், அமெரிக்க, சீன உறவு தொடர்பாகக் கேட்கப்பட்ட பல நெருடலான கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இராபர்ட் கேட்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.

தைவானிற்கு ஆயுதம் விற்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அதிபர் ஒபாமாவின் சீனப் பயணத்தின் போது அந்நாட்டு அரசுடன் பேசப்பட்டதாகவும் இராபர்ட் கிப்ஸ் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்