இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி: எஸ்.எம்.கிருஷ்ணா

வியாழன், 19 ஜனவரி 2012 (19:15 IST)
இலங்கைக்கு 100 கோடி கல்வி உதவி அளிக்கப்படுவதாக இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள காலே-ஹிக்கடுவா இடையேயான ரயில்வே பாலத்தை இந்தியாவின் உதவியுடன் இலங்அ கை அரசு கட்டி முடித்துள்ளது.

இந்நிலையில் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்ற இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா,அந்த ரயில் பாதையை இன்று துவக்கி வைத்து பேசியதாவது:

இலங்கையில் மனிதவள மேம்பாட்டுக்கு உதவும் வகையில், இந்திய அரசு 100 கோடி ரூபாயை கல்வி உதவிக்காக அளிப்பதில் பெருமை அடைகிறேன்.

இலங்கை மாணவர்களுக்கான கல்வி கட்டணம், புத்தக கட்டணம், தங்குவதற்கான கட்டணம், மாதாந்திர சம்பளம் உள்ளிட்ட இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

மேலும் இளநிலை படிப்பிற்கு 120 இடங்களும்,கணினி பொறியியல் படிப்பிற்கு 25 இடங்களும், முதுநிலை படிப்பிற்கு 50 இடங்களும், சுய நிதி திட்டத்தின் கீழுள்ளதற்கு 40 இடங்களுமாக இந்த திட்டம் மும்மடங்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்