உலக சினிமா - Ugly

செவ்வாய், 17 மார்ச் 2015 (13:25 IST)
அனுராக் காஷ்யபின் அக்ளி 2013 கான் திரைப்பட விழாவில் டைரக்டர்ஸ் ஃபோர்ட்நைட் பிரிவில் முதல்முறையாக திரையிடப்பட்டது. பிறகு, 2014 நியூயார்க் இந்திய திரைப்பட விழாவின் தொடக்கவிழா படமாக அக்ளி திரையிடப்பட்டது. 
 
இந்தியாவுக்கு வெளியே பரவலாக கவனம் பெற்ற இத்திரைப்படம், தயாராகி ஏறக்குறைய ஒரு வருடத்துக்குப் பிறகு 2014 டிசம்பர் 26 -ஆம் தேதி இந்தியாவில் வெளியானது. இந்தியின் முன்னணி இணையதளமான பாலிவுட் ஹங்கம்மா இத்திரைப்படத்துக்கு இரண்டு ஸ்டார்களே தந்தது.
அனுராக் காஷ்யப் இந்திய சினிமாவை உலக அரங்கில் பிரநிதித்துவப்படுத்தும் ஒருசில ஆளுமைகளில் முக்கியமானவர். மனித மனங்களின் இருண்மையான பகுதிகளை அதே இருண்மையுடன் படம் பிடித்து காண்பிப்பவை அவரது படங்கள். அந்தவகையில் இந்திய வணிக சினிமாவின் கூறுகளை அனுராக்கின் படங்கள் அடிப்படையிலேயே நிராகரிக்கின்றன. வணிக சினிமாவை மட்டும் கொண்டாடும் இந்தியாவில் அக்ளி திரைப்படம் காலதாமதமாக வெளியானதில், அதிக வரவேற்பை பெறாததில், பாலிவுட் ஹங்கம்மா போன்ற இணையதளங்களை மகிழ்விக்காததில் ஆச்சரியமில்லை.
 
காளி என்ற பத்து வயது சிறுமி காணாமல் போகிறாள். நடிகனாகும் முயற்சியில் இருக்கும் காளியின் தந்தை அவளை காரில் தனியாகவிட்டு, நண்பனை காணச் செல்லும் போது இந்த சம்பவம் நடக்கிறது. காளியை யார் கடத்தினார்கள்? எதற்காக காளி கடத்தப்பட்டாள்? அவளை திரும்ப மீட்க முடிந்ததா? 

கடத்தல் பின்னணியில் அமைந்த த்ரில்லராக தோன்றும் இந்தப் படம், அதன் இறுதியில் வேறொன்றாக மாற்றம் பெறுகிறது. 
 
ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட குணங்கள், ஆசைகள், தேவைகள், நெருக்கடிகள், பொறாமை, பழிவாங்கும் குணம் எல்லாம் உள்ளன. கிடைக்கிற சந்தர்ப்பத்தை இந்த குணங்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கின்றன அல்லது சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அவை எப்படி மாறுகின்றன என்பதே அக்ளி படத்தின் ஆன்மா எனலாம்.
அனுராக் காஷ்யபின் இறுக்கமான வன்முறையை படரவிடும் திரைக்கதை,  படம் தொடங்கிய சிறிது நேரத்தில் நமக்குள் ஒரு பதட்டத்தை உருவாக்குகிறது. கடைசிவரை நாம் அந்த பதட்டத்திலிருந்து விடுபடுவதில்லை. 
 
மகள் காணவில்லை என்று காவல்நிலையத்தில் காளியின் தந்தை புகார் தருகிறார். போலீஸ் அதிகாரியின் அலட்சியமும், கேள்விகளும் காளியின் தந்தையைப் போலவே நம்மையும் பொறுமையிழக்க வைக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளனுக்கு தெரியப்படுத்துவதைத் தாண்டி பார்வையாளனும் அதே உணர்வுக்கு ஆள்படும் மாயத்தை உருவாக்குவதே அனுராக்கின் திரைக்கதை மற்றும் படமாக்கலின் நோக்கமாகவும் வெற்றியாகவும் இருக்கிறது.
 
சிறப்பான நடிப்பு, அருமையான ஒளிப்பதிவு, அதிர்வூட்டும் பின்னணி இசை, ஒத்திசைவான எடிட்டிங். 
 
திரைப்படங்களில் பாஸிடிவ் எனர்ஜியை தேடாத ஆளாக நீங்கள் இருந்தால் அக்ளி உங்களுக்கான படம். 

வெப்துனியாவைப் படிக்கவும்