உலக சினிமா - சவுத்பவ் (Southpaw)

செவ்வாய், 26 ஜூலை 2016 (15:26 IST)
விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் கூடுதலான சிரத்தையை படைப்பாளியிடம் கோருபவை. பெரும்பாலும் தனி நபர்கள் அல்லது அணிகளின் வீழ்ச்சியும், அதிலிருந்து அவர்கள் மீண்டெழுவதுமே விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைக்கதையாக அமையும். விதிவிலக்காக ஒருசில படங்களே உள்ளன. 


 

 
2015-இல் வெளியான சவுத்பவ் திரைப்படத்தின் முதல் மைனஸ், அது பெரும்பாலான விளையாட்டை மையப்படுத்திய படங்களின் திரைக்கதையை கொண்டிருப்பது.
 
பில்லி ஹோப் 40 போட்டிகளுக்குப் பிறகும் வீழ்த்த முடியாத பாக்சிங் வீரன். லைட் ஹெவி வெயிட் சாம்பியன் படத்திற்கான போட்டியில் பத்தாவது ரவுண்டில் எதிரியை வீழ்த்தி ஹோப் பட்டத்தை சொந்தமாக்குகிறான். அவனுக்கு உள்ளும் புறமும் உறுதுணையாக இருப்பது, அவனது காதல் மனைவி Maureen. அவர்களுக்கு ஒரே மகள். சிறுமி.
 
பில்லி ஹோப்பிடம் சில மோசமான குணங்கள் உள்ளன. பாக்சிங்கில் அவன் எதிராளியின் குத்துகளை கையாலோ, தோளாலோ தடுப்பதில்லை. எதிராளியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முனைவதும் இல்லை. குத்துகளை முகத்தில் வாங்கி தடுப்பதே அவனது பாக்சிங்காக இருக்கிறது. பட்டம் வெல்லும் போட்டியில் அவனது ஒரு கண் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மனைவி, இத்தோடு போதும் என்கிறாள். அவன் அதனை மறுதலிக்கிறான்.
 
பில்லி ஹோப்பின் இன்னொரு விரும்பத்தாகத குணம் கோபம். திருமதி ஹோப் எவ்வளவு முயன்றும் அவனை ஒரு சாந்தமுள்ளவனாக மாற்ற முடிவதில்லை. வேண்டுமென்றே பில்லியை, வளர்ந்துவரும் இளம் பாக்சர் மேஜிக் எஸ்கோபர் சீண்டுகிறான். பொது இடத்தில் அவனிடம் சண்டை வேண்டாம் போய்விடலாம் என்கிறாள் திருமதி ஹோப். ஆனால், பில்லியின் கோபம் அதனை ஏற்க மறுக்கிறது எஸ்கோபருடன் சண்டையிடுகிறான். அந்த நேரம் எஸ்கோபரின் சகோதரன் துப்பாக்கியால் சுட, அது தவறுதலாக திருமதி ஹோப்பின் உயிரை பறித்துவிடுகிறது.
 
இதற்குப் பிறகு வரும் காட்சிகளை வழக்கமான ஹாலிவுட் படங்களிலிருந்து மாறுபட்டு உணர்ச்சிகரமாக படமாக்கியுள்ளார் இயக்குனர் Antoine Fuqua. மனைவியின் பிரிவை பில்லியால் தாங்க முடிவதில்லை. பில்லி அனாதை இல்லத்தில் வளர்ந்தவன். அதே இல்லத்தில் வளர்ந்தவள்தான் பில்லியின் மனைவியும். அவனது வாழ்வில் இரண்டற கலந்தவள். வாழ்வில் எந்த பிடிப்புமற்று முழுக்குடியில் வீழும் பில்லியின் வசந்தகாலம் ஒவ்வொன்றாக அவனிடமிருந்து வடைபெறுகிறது. 
 
கடனாளியாகி சொந்த வீட்டை விற்கிறான். அவனது நடத்தையால் மகள் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறாள். மகள் மீண்டும் அவனுக்கு கிடைக்க வேண்டும் என்றால் அவன் ஒரு சராசரி மனிதனாக மாற வேண்டும். ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும். போதையை விடவேண்டும். மொத்தத்தில் பில்லி தனது கோபம் முதலான குணங்களை மொத்தமாக தொலைக்க வேண்டும்.
 
இந்த நெருக்கடி அவனை தனது பழைய ட்ரெய்னரிடம் கொண்டு சேர்க்கிறது. இதன் பிறகான காட்சிகள் வழக்கமானவை. கடுமையான பயிற்சி, மீண்டும் எதிரியுடன் மோதல், அதில் வெற்றி, இழந்ததையெல்லாம் மீட்டு மீண்டும் பழைய நிலைக்கு வருதல் என்று நேர்கோட்டில் படம் பயணிக்கிறது.
 
இந்தப் படத்தின் சிறப்பம்சம் இயக்குனர் Antoine Fuqua-ன் இயக்கம். த ஈக்லைசர், த ட்ரெய்னிங் டே, ஷுட்டர் போன்ற அட்டகாசமான ஆக்ஷன் படங்களை இயக்கியவர். உணர்ச்சிகரமான காட்சிகளையும், பிற சாதாரண காட்சிகளையும் அவரது இயக்கம் மதிப்பு வாய்ந்ததாக மாற்றுகிறது. இன்னொரு சிறப்பம்சம் ஜேம்ஸ் ஹார்னரின் இசை. அவர் இறப்பதற்குமுன் இசையமைத்த கடைசி படம் இது. தனி ட்ராக்காகவே இதன் பின்னணி இசையை கேட்டு ரசிக்கலாம்.
 
மூன்றாவது, பில்லி ஹோப்பாக நடித்திருக்கும் Jake Gyllenhaal -இன் நடிப்பு. நைட் கிராவலர், எனிமி போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றவர். ஆனால், இப்படியொரு ஆக்ரோஷமான நடிப்பை வெளிக்காட்டியது ஆச்சரியமான சாதனை.
 
கடைசியாக படத்தின் டைட்டில். தன்னை சவாலுக்கு இழுக்கும் எஸ்கோபரை இடது கையால் கீழிருந்து தாடையில் விடும் அதிரடி குத்தால் நாக் அவுட் செய்வான் பில்லி ஹோப். இந்த ஸ்டைல் குத்துக்கு பாக்சிங்கில் வழங்கப்படும் பெயர்தான் சவுத்பவ். 
 
பாக்சிங்கை மையப்படுத்திய உணர்ச்சிகரமான படைப்பு என்று தாராளமாகச் சொல்லலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்