உலக சினிமா - Ida

புதன், 29 ஏப்ரல் 2015 (11:28 IST)
இந்த வருடம் ஆஸ்கரில் சிறந்த அயல்மொழித் திரைப்படத்துக்கான விருதை வாங்கிய படம், இடா. போலந்து இயக்குனர் Paweł Pawlikowski இடாவை இயக்கியிருந்தார்.
 
ஐம்பதுகளில் நடக்கும் இந்தக் கதை முழுக்க கறுப்பு வெள்ளையில் சொல்லப்பட்டுள்ளது. கன்னியர் மடத்தில் பயிலும் அன்னா என்ற இளம்பெண் கன்னியராக திருநிலைப்படுத்தப்படுவதற்கு சில தினங்கள் முன்பு, அவளது ஒரே சொந்தமான, அத்தை வாண்டாவை பார்த்துவர அனுப்பி வைக்கப்படுகிறாள். அன்னா அதற்கு முன் தனது அத்தையை பார்த்ததில்லை.
அத்தை வாண்டா அன்னாவிடம், அவள் ஒரு யூதப் பெண் என்பதையும், அவளது பெயர் இடா என்றும், அவளது தந்தை மற்றும் தாய் யூதர்கள் என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட்டதையும் கூறுகிறாள். 
 
தனது பெற்றோர்கள் எங்கு கொலை செய்து புதைக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து கொள்ள அத்தையுடன் தேடத் தொடங்குகிறாள் இடா. 
 
கறுப்பு வெள்ளையில் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. நீண்ட வயல்வெளிகளும், பிரமாண்டமான ஆலயத்துடனான செவிலியர் விடுதியும் ஒவ்வொரு ப்ரேமிலும் தனிமையை நினைவுப்படுத்துகிறது. இடாவிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக அத்தை வாண்டா சித்தரிக்கப்பட்டுள்ளார்.

போலந்தின் விடுதலைக்காக போராடிய வாண்டா நீதிபதியாகவும் இருந்துள்ளார். அவரது குடியும், பற்றற்ற பேச்சும் உருவாக்கும் அவரைப் பற்றிய சித்திரம் ஒருகட்டத்தில் மாறிப் போகிறது. இடா தனது பெற்றோரை இழந்தது போல் வாண்டா தனது சின்னஞ்சிறு மகனை இழந்திருக்கிறார். 

படத்தில் இயக்குனர் கையாண்டிருக்கும் திரைமொழி நம்மை ஆகர்ஷிக்கிறது. உணர்ச்சிகள் அடக்கமாக கையாளப்பட்டுள்ளது. கேமராவின் கோணங்களும், நகர்வும்கூட இதே அடக்கத்துடன் கையாளப்பட்டுள்ளதால் கதையும், அதன் கூறுமுறையும் ஒரேநேர்கோட்டில் நம்மை பரவசப்படுத்துகின்றன. 
படத்தின் இறுதியில், பெற்றோரைத் தேடிச் செல்லும் வழியில் அறிமுகமான இசைக் கலைஞன் இடாவிடம் என்னுடன் வருகிறாயா என்று கேட்கிறான். கன்னியராக திருநிலைப்படுத்தும் தினத்தில், நான் அதற்கு தயாராகவில்லை என்று மனக்குழப்பத்துடன் அங்கிருந்து வெளியேறும் இடா அவனுடன் தங்கியிருக்கிறாள். 
 
நான் உன்னுடைன் வந்தால்...? இடா கேட்கிறாள்.
 
ஒரு நாய் வாங்கி வளர்க்கலாம்.
 
அப்புறம்?
 
கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்.
 
அப்புறம்?
 
அவனிடம் பதில் இல்லை. எப்படி துறவு வாழ்க்கையில் ஒரு வெற்றிடம் இருக்கிறதோ அதே வெற்றிடம் லௌகீக வாழ்க்கையிலும் உள்ளது. இடா கன்னியர் மடத்தில் அணியும் உடையுடன் அவனைப் பிரிந்து வெளியேறுகிறாள்.
 
சென்ற வருடம் வெளியான திரைப்படங்களில் இடா ஒரு காவியம் என்பதை மறுப்பதற்கில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்