உலக சினிமா - 36 Quai des Orfèvres

செவ்வாய், 10 பிப்ரவரி 2015 (10:57 IST)
எந்த சிஸ்டமும் (அல்லது நிறுவனமும்) தங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத, தங்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத மனிதர்களைதான் விரும்பும். அவர்களை மட்டுமே தங்களுக்குள் ஏற்றுக் கொள்ளும். திறமை, உழைப்பு எல்லாம் சிஸ்டத்துக்கு பொருட்டேயில்லை. தங்களைப் பதட்டப்படுத்தும் மனிதன் திறமைசாலியாக, நேர்மையுள்ளவனாக இருந்தாலும் சிஸ்டம் அவனை எதிரியாகவே பாவிக்கும். தனக்கு பாதிப்பில்லாததாக கருதும் மனிதன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை பாதுகாக்கும், அவனுக்காக யாரை பலி தரவும் சிஸ்டம் தயங்காது.
 

 
வேலையே செய்யாத ஜால்ராக்களுக்குதான் மேனேஜ்மெண்ட்  அனுசரணையாக நடந்து கொள்கிறது என்று பலரும் புலம்புவதை கேட்டிருக்கிறோம். எந்த நிறுவனத்துக்கும், சிஸ்டத்துக்கும் திறமைசாலிகளைவிட அந்த நிறுவனத்தை மட்டுமே சார்ந்து இயங்கும், அவர்களை ஒருபோதும் பதட்டப்படுத்தாத அடிமைகள்தான் உவப்பானவை.
 
காவல்துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. காவல்துறையும் தன்னை பாதுகாக்க யாரையும் பலிதரும். அது காவல்துறையை சேர்ந்த நேர்மையான அதிகாரியாக இருந்தாலும். அதிகாரமிக்க இதுபோன்ற சிஸ்டங்களில் சுயநலமிக்க ஒரு அதிகாரியின் செயல்பாடு ஒரு தீவிரவாத இயக்கம் ஏற்படுத்தும் பாதிப்பைவிட அதிகமானது, ஆபத்தானது.
 
இந்த சிக்கலான அமைப்பு குறித்த அருமையான காட்சிகளாலான விளக்கம், 36 Quai des Orfèvres. 2004 -இல் பிரான்சில் வெளியான இத்திரைப்படம் இரு போலீஸ் அதிகாரிகளைப் பற்றியது.
 
பிரான்சின் தலைநகர் பாரீஸில் கதை நடக்கிறது. பாரீஸ் கிரிமினல் போலீஸில் தலைவர் பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஒருவர் லியோ விரிங்க்ஸ். இன்னொருவர் டெனிஸ் க்ளின். பாரீஸ் நகரில் மிகப்பெரிய திருட்டை நடத்தும் பயங்கர திருட்டுக் கும்பலை குறித்து இந்த இருவரும் விசாரணை நடத்தி வருகின்றனர். யார் அந்தத் திருட்டுக் கும்பலை பிடிக்கிறார்களோ அவர்களுக்கு தலைவர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
 
லியோ விரிங்க்ஸுக்கு அந்த கும்பல் குறித்த துப்பு கிடைக்கிறது. அதனை தருகிறவனும் ஒரு கிரிமினல்தான். விரிங்க்ஸை சாட்சியாக வைத்து மூன்று கொலைகளை செய்யும் அவன், அந்த கொலைகளுக்காக போலீஸ் அவனை தேடாமலிருக்க விரிங்க்ஸ் அவனுக்கு உதவ வேண்டும் என்கிறான். அதற்கு கைமாறாக திருட்டு கும்பலின் இருப்பிடம் குறித்த தகவலை தருகிறான்.

தனது முன்னிலையில் எதிர்பாராமல் அந்தக் கிரிமினல் மூன்று கொலைகளை செய்துவிடுவதாலும், கொல்லப்பட்டவர்களும் கிரிமினல்கள் என்பதாலும் வேறு வழியில்லாமல் விரிங்க்ஸ் அதற்கு உடன்படுகிறார். திருட்டு கும்பலைப் பிடிக்க வியூகம் வகுக்கப்படுகிறது. அனைவரும் அவர்களைப் பிடிக்க காத்திருக்க, பொறாமையில் பொசுங்கும் டெனிஸ் க்ளின் உத்தரவு பிறப்பிக்கும் முன்பே துப்பாக்கியால் சுட்டு விடுகிறார். உஷாராகும் திருடர்கள் ஒரு போலீஸ் அதிகாரியை கொன்று தப்பிக்கிறார்கள். விரிங்க்ஸ் மற்றும் அவரது அணியில் உள்ளவர்களின் நெருக்கடியால் காவல்துறை க்ளின் மீது விசாரணைக்கு உத்தரவிடுகிறது.
ஒரு போலீஸ் அதிகாரியின் உயிரைவிட, ஒரு போலீஸ் அதிகாரியின் தவறு காரணமாகதான் அந்த அதிகாரி கொல்லப்பட்டார், திருடர்கள் தப்பித்தார்கள் என்பது வெளிஉலகுக்கு தெரிவதுதான் காவல்துறையை கவலைப்படுத்துகிறது. அவர்கள் கிளினை எப்படியேனும் காப்பாற்ற நினைக்கிறார்கள். கிளினின் தவறுக்கு தண்டனை தந்தேயாக வேண்டும் என்ற விரிங்க்ஸின் நிலைப்பாடு காரணமாக அவர் நேரடியாக சிஸ்டத்துடன் மோதுகிறார். தனி மனிதர்கள் எப்போதும் சிஸ்டத்துடன் மோதி வென்றதில்லை. அதுதான் விரிங்க்ஸ் விஷயத்திலும் நடக்கிறது.
 
மூன்று கிரிமினல்கள் கொல்லப்பட்ட இடத்தில் விரிங்க்ஸ் இருந்தது கிளினுக்கு தெரியவருகிறது. அவர் அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறார். சிஸ்டம்  உற்சாகத்துடன் கிளின் எந்தத் தவறும் செய்யவில்லை என விசாரணையை கைகழுவுவதுடன் அவருக்கு தலைமைப் பொறுப்பையும் தருகிறது. ஒரு நேர்மையான அதிகாரி பதவிக்காக எதையும் செய்யும் அதிகாரியால் சிறையில் அடைக்கப்படுகிறார். சிஸ்டம் அதற்கு எல்லாவித உதவியும் செய்வதுடன் அந்த கிரிமினல் அதிகாரிக்கு பதவி உயர்வும் தருகிறது. ஆனால் கிளினின் பதவி வெறி அத்துடன் நின்றுவிடுவதில்லை. 
 
அதிகார மையங்களில் ஏற்படும் பொறாமை, பதவி வெறி ஆகியவையும், சிஸ்டம் தன்னை காப்பாற்றிக் கொள்ள எப்படியெல்லாம் வளைகிறது என்பதையும் ஆலிவர் மார்சலின் இந்தப் படம் வெளிச்சமிட்டு காட்டுகிறது. விருதுகளை குவித்த இது, ஒரு சிறப்பான போலீஸ் படம். தவறவிடக் கூடாத படங்களில் ஒன்று.

வெப்துனியாவைப் படிக்கவும்