உலக சினிமா - ட்ரெய்ன் டு புசன்

வியாழன், 27 அக்டோபர் 2016 (15:04 IST)
தென் கொரியாவின் இதுவரையான பாக்ஸ் ஆபிஸை நொறுக்கிக் கொண்டிருக்கிறது, ட்ரெய்ன் டு புசன் திரைப்படம். 2016, மே 13 கான் திரைப்பட விழாவில் இந்தப் படம் முதல்முறை திரையிடப்பட்டது. படத்தின் கதையில் எந்த புதுமையும் இல்லை. ஹாலிவுட்டில் வருடத்துக்கு நான்கு என்ற கணக்கில் வெளிவரும் சோம்பி வகை திரைப்படம்தான் இதுவும்.


 
 
சோம்பி என்றால் என்ன? 
 
ஒருவித மோசமான வைரசால் பாதிக்கப்படும் மனிதர்கள் கிட்டத்தட்ட பேயைப் போல மாறிவிடுவார்கள். அவர்களுக்கு வலி, கருணை என்று எந்த உணர்வுகளும் இருக்காது. முக்கியமாக சாவு என்பதே அவர்களுக்கு இல்லை. அவர்கள் யாரையேனும் கடித்தால், அவர்களும் சோம்பிகளாக மாறிவிடுவார்கள். ஹாலிவுட் இந்த ஜானரில் சைக்கிள் ஓட்டி, பைக்கில் விரைந்து, பிளைட்டில் பறந்து, கடைசியாக வெளிவந்த, வேர்ல்ட் வார் ஸீ திரைப்படத்தில் ராக்கெட்டே விட்டார்கள். அந்த களத்தில் துணிச்சலாக நின்று அடித்திருக்கிறார் தென்கொரிய இயக்குனர், Yeon Sang-ho.
 
மிக எளிமையான கதை. Seok-woo ஃபண்ட் மேனேஜர். தான், தனது என்று மட்டுமே நினைக்கும் சுயநலவாதி. அதன் காரணமாக மனைவியை பிரிந்து அம்மா மற்றும் சிறுமியான மகளுடன் வாழ்ந்து வருகிறான். மகளுக்கு புசன் நகரில் இருக்கும் அம்மாவை பார்க்க வேண்டும் என்று பேராவல். ஆனால், தந்தை ஒவ்வொருமுறையும் ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிக்கிறார். கடைசியில் ஒருநாள் அப்பாவும், மகளும் புசன் கிளம்புகிறார்கள். அதற்கு முன்பே அந்த அசம்பாவிதம் ஆரம்பித்துவிடுகிறது. வைரஸ் தொற்றால் மனிதர்கள் சோம்பிகளாகி அடுத்தவர்களையும் சோம்பிகளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது எதுவும் அறியாமல் பயணிகள் ரயிலில் ஏறுகிறார்கள். கடைசி நிமிடம், வைரசால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணும் (சோம்பி) அந்த ரயிலில் ஏறி விடுகிறாள். ரயில் கிளம்புகிறது. தென்கொரியா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சோம்பிகளின் தாக்குதலுக்கு உள்ளாக, ரயிலிலும் பீதி பதட்டம். ரயிலிலும் அந்த பெண் காரணமாக பயணிகள் சோம்பிகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த இக்கட்டான சூழலில் அப்பாவும் மகளும், பிற பயணிகளும் தப்பித்தார்களா என்பதை இருக்கை நுனி பதட்டத்துடன் சொல்கிறது ட்ரெயின் டு புசன் திரைப்படம். 
 
சோம்பி பாதிப்பை ட்ரக்கில் அடிப்பட்ட மானின் வழியாக இயக்குனர் சொல்லும் முதல் காட்சியிலேயே படம் நம்மை கவர ஆரம்பித்துவிடுகிறது. ரயில் ஒவ்வொரு காட்சியுமே திகிலுடன் நகர்கிறது. சுயநலமான மனிதன், முரட்டுத்தனமான ஆனால் பிறருக்கு உதவும் நபர், அவனது கர்ப்பிணியான மனைவி, வயதான இரு சகோதரிகள், சுயநலத்தின் உச்சமாக இருக்கும் ஒரு விஐபி என்று கதாபாத்திரங்கள் கச்சிதமாக படைக்கப்பட்டுள்ளன.
 
இதுவரை வந்த சோம்பி திரைப்படங்களில் நெகிழ்ச்சியான கண்கலங்க வைக்கும் இறுதிக்காட்சி உள்ளது ட்ரெயின் டு புசன் திரைப்படத்தில் தான். இந்தப் படத்தின் அமோக வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்.
 
சுவாரஸியமான ஒரு படத்தைப் பார்க்க விரும்புகிறவர்களுக்கு, ட்ரெயின் டு புசன் சரியான தேர்வு.

வெப்துனியாவைப் படிக்கவும்