உலக சினிமா - லாக் (Locke)

ஜே.பி.ஆர்

திங்கள், 29 செப்டம்பர் 2014 (10:49 IST)
ஒரு நடிகர் மட்டும் நடித்த திரைப்படங்களில் சென்ற வருடம் வெளியான ராபர்ட் ரெட்போர்டின் ஆல் இஸ் லாஸ்ட் (All Is Lost) 2010 -இல் வெளியான பரீட் (Buried) திரைப்படங்கள் முக்கியமானவை. ஹாலிவுட்டில் வெளியான மற்றொரு படமான பிரேக்கிலும் (Brake) 95 சதவீத படத்தில் ஒரேயொரு நபர் மட்டுமே இடம்பெறுவார்.
 
2013 -இல் பிரிட்டனில் தயாரான ஸ்டீவன் நைட்டின் லாக் திரைப்படத்திலும் ஒரேயொரு நபர் மட்டுமே நடித்திருந்தார். 
ஐவன் லாக் ஒரு ஃபோர்மேன். பிர்மிங்காம் பகுதியில் நடக்கயிருக்கும் மிகப்பெரிய கட்டிடத்தின் கீழ்த்தள கான்கிரீட் பொறுப்பு லாக்கினுடையது. மிலிட்டரி மற்றும் நியூக்ளியார் புராஜெக்ட் தவிர்த்து ஈரோப்பில் நடக்கயிருக்கும் மிகப்பெரிய கான்கிரீட் போரிங் (concrete pour) அது. 
 
அதிகாலையில் நடக்கயிருக்கும் கான்கிரீட் போரிங்குக்கு முதல்நாள் இரவு வேலை முடித்து லாக் காரில் கிளம்புகிறார். அன்றிரவு நடக்கும் முக்கியமான கால்பந்து போட்டியை தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் தொலைக்காட்சியில் பார்ப்பதாக லாக் வாக்குத் தந்திருக்கிறார். அவரது குடும்பம் தங்கள் அணியின் பனியனை அணிந்து போட்டியை காண தயாராக இருக்கிறது. லாக்கின் மனைவி கத்ரினா லாக்குக்குப் பிடித்த ஜெர்மன் பீர் போத்தல்களை தயாராக வாங்கி வைத்துள்ளார். 

லாக் தனது பணி நிமித்தம் ஒரு வருடம் முன்பு வீட்டிற்கும் வேலை நடக்கும் இடத்திற்கும் அலைந்து கொண்டிருந்த நேரத்தில் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்க நேர்கிறது. அவருக்கு உதவியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் 43 வயதான பெதேன் என்ற பெண்ணுடன் ஒயின் போதையில் உறவு வைத்துக் கொள்கிறார். ஒரேயொரு நாள்.

அந்த பெதேன் இன்றிரவு ஒரு குழந்தையை பெற்றெடுக்கப் போகிறாள். அது ஐவனுடையது. லண்டனில் பெதேனுக்கு யாரையும் தெரியாது. ஒரெயொருமுறை உறவு வைத்துக் கொண்டாலும் பெதேன் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் நேரத்தில் அவளுடன் இருப்பது என்று முடிவு செய்கிறார் ஐவன் லாக். 
 
வேலை முடித்து ஐவன் காரில் ஏறுவதிலிருந்து படம் தொடங்குகிறது. தனக்குக்கீழ் பணிபுரியும் டோனல் என்பவரை அழைத்து மறுநாள் நடக்கும் கான்கிரீட் போரிங்குக்கு தன்னால் வர இயலாது என்கிறார். டோனலால் அதனை நம்ப முடியவில்லை. உயரதிகாரி கேரத்திடமும் அதனை ஐவன் தெரிவிக்கிறார். சிறிய தவறு நடந்தாலும் 100 மில்லியன் டாலர்கள் நஷ்டத்தை உண்டாக்கும் புராஜெக்ட் அது. தலைமையகமான சிகாகோவுக்கு ஐவனின் முடிவை தெரியப்படுத்தினால் உடனடியாக அவர் வேலையிழக்க வாய்ப்புள்ளது என்கிறார் கேரத். பரவாயில்லை, நான் ஏற்கனவே வரப்போவதில்லை என முடிவு செய்துவிட்டேன் என்கிறார் ஐவன்.

தனது மனைவியிடமும் அன்றிரவு வர முடியாது என்பதை தெரியப்படுத்துகிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறுகிறார். முதலில் அழும் கத்ரினா அடுத்து கோபாவேசமாக பேச ஆரம்பிக்கிறாள். இனி என்னுடைய வீட்டிற்கு நீ வரத்தேவையில்லை என்று கடுமையான ஒரு முடிவையும் எடுக்கிறாள்.
 
கேரத்திடமிருந்து சிறிது நேரத்திலேயே போன் வருகிறது. ஐவன் வேலையிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். இந்த போன் உரையாடல்களின் போது நடுநடுவே பெதேனிடமும் பேசி அவளை சாந்தப்படுத்துகிறார் ஐவன்.
இந்தவகை படங்களில் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் ஒருவர் சிக்கிக் கொள்வதே கதையின் பின்புலமாக இருக்கும். ஆல் இஸ் லாஸ்டில் கடலில் தனியாக மாட்டிக் கொள்கிறார் ராபர்ட் ரெட்போர்ட். பரீட் திரைப்படத்தில் உயிருடன் ஒருவன் சவப்பெட்டியில் மாட்டிக் கொள்கிறான். பிரேக்கில் நகர முடியாத சின்ன கண்ணாடிப் பெட்டியில் ரகசிய ஏஜெண்ட் கடத்தப்படுகிறார். 
 
ஒரு நபரை மட்டும் வைத்து திரைக்கதை அமைக்கையில் அசந்தர்ப்பமான சூழல் தவிர்க்க முடியாத அங்கமாகிவிடுகிறது. அதிலிருந்து லாக் திரைப்படம் மாறுபட்டிருப்பதே இப்படத்தின் சிறப்பம்சம் எனலாம். ஐவன் நெடுஞ்சாலையில் சுதந்திரமாக காரோட்டிச் செல்கிறார். சராசரி மனிதர்கள் எதிர்கொள்ளும் சில குடும்பப் பிரச்சனைகள், வேலை சம்பந்தமான பிரச்சனைகளை தனது கார் பயணத்தின் போது போனில் விவாதிக்கிறார். ஒரேயொரு நபர் மட்டும் நடிக்கும் வழக்கமான படங்களிலிருந்து இது மாறுபட்டது மட்டுமின்றி சவாலானதும்கூட.
 
லாக் திரைப்படம் முழுக்க ஐவனாக நடித்திருக்கும் டாம் ஹார்டியின் நடிப்பையும், உரையாடலையும் மட்டுமே சார்ந்துள்ளது. உரையாடல்களின் வழியாக அறிய கிடைக்கும் ஐவனின் பிரச்சனைகளும், எதிர்முனையில் பேசுகிறவர்களின் மனநிலைகளும் படத்தை கட்டமைக்கின்றன. முக்கியமாக இந்த உரையாடல்களின் வழியாக நாம் அறிந்து கொள்ளும் ஐவன் லாக் என்பவரது தனிப்பட்ட குணங்கள். 
 
ஐவன் லாக் பெதேனுடன் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக் கொண்டார். அதுவும் எதிர்பாராமல். ஆனாலும் அவளது குழந்தைக்கு தான் தகப்பன் என்ற முறையில் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும் என நினைக்கிறார். மனைவி மற்றும் வேலை செய்யும் கம்பெனியுடன் அபஸ்வர உறவு ஏற்படும் என்ற நிலையிலும் பெதேனின் பிரசவத்தின் போது உடனிருப்பது என்ற முடிவை எடுக்கிறார். பெதேனிடம் அவருக்கு இருப்பது காதல் இல்லை, கடமை. பெதேன் அவரிடம், என்னை நீ காதலிக்கிறாயா என்று கேட்கையில், வலியில் இந்த மாதிரியெல்லாம் நீ பேசுவதாக நினைக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் காதலிக்கவோ, வெறுக்கவோ முடியாது என்கிறார். எந்த சந்தர்ப்பத்திலும் பொய்யான ஓர் வார்த்தை ஐவனிடமிருந்து உதிர வாய்ப்பில்லை என்பதை நாம் உணர்ந்து கொள்கிறேnம்.
 
தனக்கு கீழ பணியாற்றும் டோனலுடன் அவர் பேசுகிற உரையாடல்கள்தான் படத்தில் முக்கியமானவை. 350 மெட்ரிக் டன் கான்கிரீட் 200 ட்ரக்குகளில் கொண்டு வரப்படும் என டோனல் கூறும்போது, 355 மெட்ரிக் டன் கான்கிரீட், 218 ட்ரக்குகள் என்று திருத்துகிறார் ஐவன். அதேபோல் ஒவ்வொரு தகவலும் அவரிடம் கச்சிதமாக உள்ளது. வேலையை தான் இல்லாவிடினும் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பும், அதற்கு டோனலை அவர் தயார்படுத்தும் விதமும் படத்தின் சிறப்பும்சம் என்றே சொல்ல வேண்டும். 
 
பலமுனை நெருக்கடிகளுடன், ஜலதோஷமும் சோந்து கொள்ள அனைவருடனும் பொறுப்பாக பேசியபடி காரோட்டிச் செல்லும் கடினமான கதாபாத்திரம் டாம் ஹார்டிக்கு. அதனை அனாயாசமாக செய்திருக்கிறார். வாரியர் படத்தில் டாம் ஹார்டி  ஏற்று நடித்த பாக்சர் கதாபாத்திரத்தைப் பார்த்தவர்கள் லாக் படத்தில் வரும் அவரது ஐவன் கதாபாத்திரத்தை பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவார்கள். அப்படியொரு தலைகீழ் மாற்றம்.
 
பார்க்கவும், கேட்கவும் தகுதியுள்ள படம் லாக்.

வெப்துனியாவைப் படிக்கவும்