மரணத்துக்கு காரணம் அதிக வேகம், தேய்ந்த டயர்கள்

ஞாயிறு, 30 மார்ச் 2014 (19:09 IST)
கடந்த நவம்பர் 30 கார் விபத்தில் ஹாலிவுட் நடிகர் பால் வால்கர் மரணமடைந்ததுக்கான காரணத்தை முழுமையான விசாரணைக்குப் பின் சில தினங்களுக்கு முன் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நாற்பது வயதேயான பால் வால்கர் தனது நண்பனின் காரில் பயணித்த போது சாலையோர மின்கம்பத்தில் கார் மோதி காரை ஓட்டிய நண்பரும், பால் வால்கரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். 
 
இந்த விபத்துக்கு அதிவேகமே காரணம் என சொல்லப்பட்டது.
 
விபத்து தொடர்பான முழுமையான விசாரணைக்குப் பிறகு காவல்துறையும் அதே காரணத்தைதான் கூறியுள்ளது.
 
மணிக்கு 45 மைல் வேகத்தில் செல்ல வேண்டிய சாலையில் மணிக்கு 95 மைல் வேகத்தில் வால்கரின் நண்பர் காரை ஓட்டிச் சென்றுள்ளார். 
அத்துடன் காரின் முன்பக்க இடது டயரும், பின்பக்க வலது டயரும் ஒன்பது வருடமாக பயன்படுத்தப்பட்டு வந்ததையும் கண்டு பிடித்துள்ளனர். நான்கு வருடங்கள் கியாரண்டி உள்ள டயர்களை ஒன்பது வருடங்களாக பயன்படுத்தி வந்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
காரின் மெக்கானிகல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கார் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தது. விசாரணைக்குப் பின் காரின் மெக்கானிகல் தொழில்நுட்பத்தில் எவ்வித பழுதும் ஏற்படவில்லை, அதிவேகமே விபத்துக்கு காரணம் என கண்டு பிடித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்