சுய உதவி குழுக்களுக்கு ரூ.2400 கோடி கடன் இலக்கு

சனி, 27 ஜூன் 2009 (11:09 IST)
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.2400 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமை‌ச்ச‌ர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கையை தாக்கல் செய்து பே‌சிய துணை முதலமை‌ச்ச‌ர் மு.க. ‌ஸ்டா‌லி‌ன், 62.93 லட்சம் மகளிரை உறுப்பினர்களாக கொண்டு 3,91,311 சுய உதவிக் குழுக்கள் இயங்குகின்றன. இவற்றின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.2167 கோடியாகும். இந்த ஆண்டு 50 ஆயிரம் சுய உதவிக் குழுக்களும், அடுத்த ஆண்டு 50 ஆயிரம் சுய உதவிக் குழுக்களும் அமைக்கப்படும். இதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து மகளிரையும் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெறும். இவர்களுக்கான வங்கி கடன் இலக்கு இந்த ஆண்டு ரூ.2400 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

3 ஆண்டு கால கடும் உழைப்பின் பயனாக நமது நோக்கமான ஊரக - நகர்ப்புறங்களுக்கு இடையேயான இடைவெளியை குறைப்பதில் இன்று நாம் பெருமளவில் வெற்றி பெற்றுள்ளோம். மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காகவும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும், ஊராட்சி அமைப்புகளுக்கு புத்துயிர் அளிப்பதிலும் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம் எ‌ன்று தெ‌ரி‌‌‌‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்