கசகசாவை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய பிறகு அதோடு முந்திரிப்பருப்பையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு அதனுடன் மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும். பிறகு பட்டாணி சேர்த்து கிளறி அதோடு ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
பட்டாணி நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள கசகசா, முந்திரிப்பருப்பு கலவையை சேர்த்து மசாலா கெட்டியானதும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும். சூப்பரான சுவையான பீஸ் மசாலா தயார். சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.