பச்சரிசி, உளுந்தம்பருப்பு இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும். கடலை பருப்பை தனியாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். கிரைண்டரில் பச்சரிசி, உளுந்தம்பருப்பு மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தை விட கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலைப்பருப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். முக்கால் பதத்திற்கு வேகவைத்து தண்ணீரை வடித்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். நன்றாக ஆறிய பின் தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸ்சியில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அச்சு வெல்லத்துடன் 25 மில்லி தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி வடிகட்டியில் வடித்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயை வைத்து வடித்து வைத்துள்ள வெல்லப்பாகை ஊற்றவும். பாகு கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சேர்த்து கிளறவும்.
கலவை கெட்டியானதும் அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிடவும். ஆறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் மாவில் சோடா உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு உருண்டைகளை முக்கி வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கி வைத்துள்ள உருண்டைகளை போடவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகவிடவும். ஒரு புறம் வெந்ததும் ஒரு கம்பியால் மெதுவாக திருப்பி போடவும். இரு புறமும் நன்கு வெந்ததும் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். சுவையான சுசியம் தயார்.
குறிப்பு: பச்சரிசி உளுந்த மாவுக்கு பதிலாக மைதா மாவிலும் செய்யலாம். மாவுக்கலவை மீதமாக இருந்தால் அதில் பொடிதாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடிதாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை, தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஒரு குழிக்கரண்டி வீதம் மாவு எடுத்து சூடான எண்ணெய்யில் போட்டு சிவக்க சுட்டு எடுத்தால் கார போண்டா தயார்.