அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டிய சில சமையலறை குறிப்புகள்...!!
ஆம்லெட் செய்ய முட்டையை அடிக்கும்போது அதோடு சிறிதளவு பால் அல்லது சோள மாவு சேர்த்தால் ஆமலேட் பெரியதாகவும், மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.
நீங்கள் வதக்கிச் செய்திருக்கும் காய்கறியில் ஒரே எண்ணெய் மயமா? கவலையே வேண்டாம். கொஞ்சம் கொள்ளு மாவைத் தூவினால் போதும். கொள்ளுக்கு எண்ணெயை உறிஞ்சும் தன்மை உண்டு.
குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு, அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் அப்போது பறித்தது போல ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.
உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும் போது, நறுக்கிய வில்லைகளின் மேல் சிறிது பயத்தம் மாவு தூவிவிட்டுப் பொரித்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சோறு சேர்த்து அரைத்து வடை தட்டினால், உளுந்து வடை சுவையாக இருக்கும்.
பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும். லேசாக தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.
தோசை மாவு புளித்துப் போனால், அதில் அதிக அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து தண்ணீர் மேலே நிற்கும். அதை வடித்துவிட்டு தோசை ஊற்றினால் சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.
கட்லெட் செய்வதற்கு பிரெட் தூள் இல்லையா? பிரெட் துண்டை தவாவில் புரட்டி எடுத்து, மிக்ஸியில் உதிர்த்து உபயோகிக்கலாம். கொஞ்சம் ஓட்ஸ் சேர்த்தால் கட்லெட்டின் சுவை கூடும்.
பூசணி அல்வா செய்யும் போது, பூசணியைத் துருவி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, பிறகு செய்தால் அல்வா பொலபொலவென அருமையாக வரும்.
சாம்பார் பொடிக்கு அரைக்கும்போது, ஒரு கப் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது, சாம்பார் குழைவாகவும் கெட்டியாகவும் வரும். பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது.