கடந்த 16ஆம் தேதி நகைச்சுவை நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தமிழக முதல்வரையும் காவல்துறை அதிகாரி ஒருவரையும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு, ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் பேசியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது 'ஐபில் போட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும் இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இரண்டு வழக்குகளில் இருந்தும் தனக்கு ஜாமீன் வேண்டும் என கருணாஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவருக்கு இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்ததையடுத்து இன்று காலை கருணாஸ் விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவர் தினமும் திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் 30 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.